My link to facebook

Welcome to my blog

Thursday, March 14, 2013

சிவராத்திரி விரதம் மிகவும் எளிமையானது.
காலையில் நீராடிவிட்டு, நமசிவாய அல்லது சிவாயநம என ஓதியபடியே இருக்க வேண்டும்; சாப்பிடக் கூடாது. நோயாளிகள் எளிய உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். மாலையில் சிவாலயத்திற்கு, வில்வ இலை கொண்டு செல்ல வேண்டும். இரவு கடைசி கால பூஜை வரை, அபிஷேகம் பார்க்க வேண்டும். முதல் கால பூஜைக்கு பால், அடுத்த பூஜைக்கு தயிர், மூன்றாம் கால பூஜைக்கு வெண்ணெய், நெய், நான்காம் கால பூஜைக்கு தேன் ஆகியவற்றை அபிஷேகம் செய்வதற்காக கோவிலில் ஒப்படைக்க வேண்டும். அன்றிரவில் விழித்திருக்க வேண்டும். அப்போது, சிவனை குறித்த ஸ்தோத்திரங்கள், தேவார, திருவாசகப் பாடல்களைப் பாட வேண்டும். மறுநாள் காலையில், அவரவர் தகுதிக்கேற்ப, அன்னதானம் செய்ய வேண்டும். அன்னதானத்துக்கு பின் சாப்பிட்டு, விரதத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
சிவபெருமான் உருவம், அருவுருவம், அருவம், எனும் மூவகை நிலைகளில் காட்சி தருகிறார். கருவறையில் பெரும்பாலும், அருவத் திருமேனியான சிவலிங்கமாகவே வீற்றிருப்பார். அருவுருவத் திருமேனியாக (உருவமே இல்லாத நிலை) திருப்பெருந்துறை போன்ற சில கோவில்களில் அருள்புரிகிறார். சோமாஸ்கந்தர், தட்சிணா மூர்த்தி, பிட்சாடனர், பைரவர் உள்ளிட்ட சில வடிவங்கள் உருவமுடையவை.
நமக்கு என்ன பலன் தேவையோ, அதற்கேற்ற வடிவத்தில் சிவபெரு மானை உருவ வடிவில் வழிபட்டு பலன் பெறலாம். சாந்தமே உருவான தட்சிணா மூர்த்தியாக வழிபடுபவர்கள், மன அமைதியும், ஞானமும் கைவரப் பெறுவர். வசீகரமூர்த்தியாகத் திகழும் பிட்சாடனரை வணங்கினால், முகத்தில் வசீகரமும், மனதில் புத்துணர்வும் பிறக்கும். வக்ரமூர்த்தியாக விளங்கும் பைரவராக சிவனை வழிபட்டால், எதிரிகளின் தொல்லை நீங்கி, தைரியம் உண்டாகும். ஆனந்த தாண்டவம் ஆடும் நடராஜராகத் துதித்தால், மனமகிழ்ச்சியும் குதூகலமும் ஏற்படும். அம்மையப்பராக சிவபார்வதி வீற்றிருக்க, முருகன் நடுவில் அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்தமூர்த்தியை தரிசித்தால், வாழ்வில் நிம்மதியும், மனநிறைவும் ஏற்படும். சிவராத்திரியன்று, குலதெய்வ வழிபாடு செய்யும் வழக்கமும் உண்டு. அவரவர் குலதெய்வக் கோவிலுக்கு சென்று வழிபட்டு வாருங்கள். நன்மை நடக்கும்.
***

No comments: